‘நான் யார்’ என்று கேட்டால் ஞானம். ‘நீ யார்’ என்று கேட்டால் ஆணவம். ‘அவன் யார்’ என்று கேட்டால் அறியாமை. ஆனால் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் உள்ள ஒரே கேள்வி கேஜி மாஸ்டர் என்பவர் யார் என்பதுதான். என்னால் முடிந்தவரை திரட்டிய தகவல்களையும் எனது அனுபவத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

தாயகத்தில் நயினையை பூர்வீகமாகக் கொண்ட இவரது பெற்றோர் அமரர்கள் குமாரசாமியும் பூரணமும் ஆவர். குடும்பத்தின் தலைமகனாகப் பிறந்த இவருக்கு என்னையும் உள்ளடக்கி ஏழு உடன் பிறப்புக்கள். சிறுவயது வறுமையின் கொடுமையும், இளமைக் காலத்தில் அதற்கு எதிரான போராட்ட மும் அவரது வளர்ச்சிக்கான மூலதனம்என்பார். சிறு வயதில் இருந்தே கல்வியில் அதீத திறமை மிக்க இவர் குடும்ப வறுமை காரணமாக எட்டாந்தரக் கல்வியுடன் படிப்பை நிறுத்திவிட்டு பல மளிகைக் கடைகளிலும் தெரு அங்காடிகளிலும் தொழில் புரிந்தவர்.

மீண்டும் கல்வியைத் தொடர வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டபோது குடும்ப பொருளாதாரத்துக்கான தனது பங்களிப்பில் தடை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக உறவினர்களது தோட்ட வேலைகளில் வருமானத்தை உறுதிப்படுத்திக் கொண்டு மூன்று வருடங்களின் பின்னர் மீண்டும் எட்டாம் தரக் கல்வியை நயினாதீவு மகாவித்தியாலயத்தில் ஆரம்பித்து பத்தாம் தரப் பரீட்சையில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கல்வி நிறுவனத்திற்குப் பெருமை சேர்த்தவர்.  அவரது உயர் கல்வியையும் ஆனைப்பந்தி உயர்கல்வி நிறுவனத்தில் தொடர்ந்த இவர் குடும்பத்தின் பொருளாதாரப் பங்களிப்புக்காகவும், தனது படிப்புக்காகவும் தேவைப்படும் வருமானத்தை கிளிநொச்சி, சாவகச்சேரி, சுன்னாகம் சந்தைகளில்  சில்லறை வியாபாரத்தின் மூலம் நிர்வகித்தார். இக்காலப் பகுதியில் இவரது இளைய சகோதரரின் ஒத்துழைப்பும் இவரது ஆசிரியை ஒருவரது ஒத்துழைப்பும் மிகப் பாரிய பங்களிப்பாக இருந்ததாக எப்பொழுதும் கூறிக்கொள்வார்.

பல்கலைக்கழக் கல்வியையும் முடித்த இவர், கல்வி வாழ்க்கைக்கு அவசியம் ஆனால் அது கர்வத்தை வளர்ப்பதாக இருக்கக் கூடாது என உணர்த்துபவர். ஆசிரியராகப் பணிபுரிந்த காலங்களில் மட்டுமல்ல எப்பொழுதுமே தனது வாழ்க்கைக் கல்வியை மற்றவர்களுடன் பகிர்ந்து அவர்களது வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். எனது அனுபவங்களில் இவர் ஒரு ஞானி. எந்த ஒரு விடயத்திற்கும் இவரிடம் வியக்கத்தக்க விளக்கம் உண்டு. நிச்சயமாக இவரது அனுபவப் பகிர்வுகள் எல்லோரது வாழ்க்கையிலும் சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தியே தீரும். 
                                                                                                                                                                                                                                AK N Uthayan Master
             
கனடாவின் ரொறன்ரோ (Toronto) மாநகரில் வாழும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடையே, சுயமுன்னேற்ற சிந்தனையுடன், வாழ்க்கையில் தனக்கென சில கோட்பாடுகளை அமைத்து அதன்படி ஒழுகி பலருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வருபவர்களில் ஒருவர் நயினாதீவைச் சேர்ந்த திரு.குமாரசாமி குணசிங்கம் அவர்கள்.

கேஜி மாஸ்டர் (KG Master) என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் இவர் ஒரு B.Com பட்டதாரி. ஓர் கணக்காளராக இருந்தபோதும் கற்பித்தலில் உள்ள ஆர்வத்தினால் ஓர் ஆசிரியராகத் தாயகத்தில் கடமையாற்றியவர். KG's Institute என்னும் தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளரான பின்னர் ‘கேஜி மாஸ்டர்’ என்று அழைக்கப்பட்டு இன்றும் அப்பெயராலேயே இனங்காணப்படுகிறார்.

பத்திரிகை ஆக்கங்களினூடாகவும், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளினூடாகவுமே இவரை அறிந்திருந்த நான் நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தபோது ஒரு நாணயமான நல்ல மனிதநேயமுள்ள மனிதராக அவரைக் கண்டேன். ஊருக்கு மட்டும் உபதேசம் செய்பவர்கள் போலல்லாது தனது ஒவ்வொரு வார்த்தைகளையும் அவர் கடைப்பிடித்து வருவதை அறியக்கூடியதாக இருந்தது.

தனது வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு, வாழ்வியல் சம்பந்தமான விடயங்களில் தன்னைப் பெரிதளவில் ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் கேஜி மாஸ்டருடன் உரையாடியபோது 'எனது வாழ்க்கையின் இலக்கணம் இது தான். "நாங்கள் வெல்கிறோம் அல்லது கற்றுக்கொள்கிறோம்". வாழ்க்கையில் தோல்வி என்று எதுவுமே இல்லை. தோல்வி என்ற சொல்லை நான் பயன்படுத்துவதில்லை. எனவே சவால்களை நாம் வெல்கிறோம் அல்லது அவற்றிலிருந்து புதிய பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்' என்றார். இளமைக் காலத்து மிகக் கொடிய வறுமையைப் பற்றிக் குறிப்பிடும் போது வறுமையானது கடின உழைப்பிற்கு வித்திட்டதாகவும், வாழ்க்கையை ஒழுங்கான முறையில் முன்னெடுத்துச் செல்ல ஓர் அழகான பாதையை உருவாக்கித் தந்துள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து உரையாடியபோது …

சுய முன்னேற்றம் என்பது ஒருவரது வாழ்வில் தவிர்க்கப்படக்கூடாத விடயம் என்றும் அதுவே அடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்வதற்கான அடிப்படை எனவும் கூறினார். . 'வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் நாம் அடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்பைத் தருவதால் தேடுதல் உள்ளவர்களுக்கு இலகுவாகக் கிடைக்கின்றது’ என்றார். அத்துடன் நேர்மை, நெஞ்சுத்துணிவு, தன்னம்பிக்கை ஆகிய மூன்றையும் அத்திவாரமாகக் கொண்டு உழைப்பவர்களுக்கே வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைகின்றது என்பதை வார்த்தைகளால் மட்டுமன்றி வாழ்க்கையாலும் பகிர்ந்து கொள்கிறார் கேஜி மாஸ்டர். 
                                                                                                                                                             - ஆசிரியர் – 'வானமே எல்லை' (சுய முன்னேற்ற மாத இதழ்)
                                                     __________________________________

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola