1)   வாழ்க்கை

                                                           (  தடைகள் தரும் தகவல்  )  


முயற்சி திருவினையாக்கும்', 'முயற்சி உடையார் இகழ்ச்சியடையார்', தெய்வத்தாலாகாதது எனினும் தன் மெய் வருந்தக் கூலி தரும்' என்பவையெல்லாம் நமது முயற்சி வெற்றியளிக்கும் என்பதை உறுதிசெய்கின்றன. நமது நாளாந்த வாழ்வு என்பது நமது முயற்சியின் தொடர்ச்சியான வெளிப்பாடே முயற்சியில்லாமல் இலக்கை அடைவது என்பது முயற்கொம்புதான் ஆனால் முயற்சி பற்றிய சில விடயங்கள் முயற்சியை ஆரம்பிப்பதற்கு முன்னர்

முயற்சி பற்றிய சில விடயங்கள் நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும். முதலில் முயற்சி ஒன்றை ஆரம்பிப்பதற்கு அத்திவாரமாக அமைவது எது என்பதுபற்றிய தெளிவு மிகவும் அடிப்படையானதாகும். துரதிஸ்டவசமாக நம்மில் பலர் இந்த அடிப்படையைக் கவனத்தில் கொள்வதில்லை. இதற்கான காரணம் அதிபெரும்பலானவர்களுக்கு இந்த அடிப்படை தெரிந்திருப்பதில்லை.

ஒரு முயற்சியை நாம் ஆரம்பிப்பதற்கு அடிப்படையாக அமைவது நாம் மேற்கொள்ள இருக்கும் முயற்சியின் முடிவு அல்லது பெறுபேறாகும். அதாவது ஒன்றின் முடிவே அதற்கான முயற்சியை ஆரம்பிப்பதற்குக் காரணமாகும். உதாரணமாக, நாம் மலையுச்சியை அடையவேண்டும் என்ற ஒரு குறிக்கோளை அடைவதற்கு நாம் மேற்கொள்ளும் ஆரம்ப நடவடிக்கைகள் அந்த நோக்கத்தில் இருந்தே ஆரம்பிக்கப்படுகின்றன என்பதுதான் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய முக்கியமான விடயமாகும். அதாவது மலையின் உச்சியை அடைவதற்கு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதில் இரட்டைக்கருத்துக்கு இடமில்லை. ஏனெனில் மலையின் உச்சியை அடைவதற்கு அதன் உச்சியில் இருந்துதான் ஆரம்பிக்கவேண்டும்.

உச்சியிலிருந்து ஆரம்பிப்பதா? அது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி எழுவது இயல்பானதே. ஆனால் ஒரு முயற்சியின் வெற்றி அதன் ஆரம்பத்தில் தான் தங்கியுள்ளது. ஆரம்பம் தவறானால் முழுவதும் தவறானதாகிவிடும். இதனால்தான் ‘முதற்கோணல் முற்றும் கோணல்’ எனக்கூறுவது வழக்கமாக அமைந்துள்ளது. ஆரம்பம் கோணாமல் இருப்பதற்கு ஒரே வழி அதன் முடிவிலிருந்து ஆரம்பிப்பதுதான். உச்சி என்ற இலக்கை உள்ளத்தில் வைத்து வேறு எந்த நோக்கத்துக்கும் இடமளிக்காமல் முழுமையான தன்னம்பிக்கையுடன் ஆரம்பிப்பதுதான் வெற்றி நிச்சயம் என்பதை உறுதிப்படுத்துவதாகும். இன்னும் விரிவாகக் கூறுவதாயின் உச்சியை ஏற்கனவே நாம் அடைந்துவிட்டோம் என்ற உறுதிகுலையாத உள்ளத்துணர்வுடன் நாம் ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் மலை சிறிதாகவும் நாம் பெரிதாகவும் அமைவோம். எப்பொழுது மலை எம்மைவிடச் சிறிதாகின்றதோ அப்பொழுது உச்சியை அடைவதற்கான வழிகளும் இலகுவாக்கப்படுகின்றன. இதனால் நமது முயற்சியின்போது ஏற்படும் தடைகள் ஒருபொழுதும் எம்மைப் பின்னடைய வைப்பதில்லை. ஏனெனில் நாம் ஏற்கனவே உச்சியை   அடைந்துவிட்டோம்.

                                                                 2)   வாழ்க்கை

                                                       வெற்றியின் உறுதிக்கு)

             'முயற்சி திருவினையாக்கும்', 'முயற்சி உடையார் இகழ்ச்சியடையார்', தெய்வத்தாலாகாதது எனினும் தன் மெய் வருந்தக் கூலி தரும்' என்பவையெல்லாம் நமது முயற்சி வெற்றியளிக்கும் என்பதை உறுதிசெய்கின்றன. நமது நாளாந்த வாழ்வு என்பது நமது முயற்சியின் தொடர்ச்சியான வெளிப்பாடே முயற்சியில்லாமல் இலக்கை அடைவது என்பது முயற்கொம்புதான் ஆனால் முயற்சி பற்றிய சில விடயங்கள் முயற்சியை ஆரம்பிப்பதற்கு முன்னர்

முயற்சி பற்றிய சில விடயங்கள் நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும். முதலில் முயற்சி ஒன்றை ஆரம்பிப்பதற்கு அத்திவாரமாக அமைவது எது என்பதுபற்றிய தெளிவு மிகவும் அடிப்படையானதாகும். துரதிஸ்டவசமாக நம்மில் பலர் இந்த அடிப்படையைக் கவனத்தில் கொள்வதில்லை. இதற்கான காரணம் அதிபெரும்பலானவர்களுக்கு இந்த அடிப்படை தெரிந்திருப்பதில்லை.

ஒரு முயற்சியை நாம் ஆரம்பிப்பதற்கு அடிப்படையாக அமைவது நாம் மேற்கொள்ள இருக்கும் முயற்சியின் முடிவு அல்லது பெறுபேறாகும். அதாவது ஒன்றின் முடிவே அதற்கான முயற்சியை ஆரம்பிப்பதற்குக் காரணமாகும். உதாரணமாக, நாம் மலையுச்சியை அடையவேண்டும் என்ற ஒரு குறிக்கோளை அடைவதற்கு நாம் மேற்கொள்ளும் ஆரம்ப நடவடிக்கைகள் அந்த நோக்கத்தில் இருந்தே ஆரம்பிக்கப்படுகின்றன என்பதுதான் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய முக்கியமான விடயமாகும். அதாவது மலையின் உச்சியை அடைவதற்கு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதில் இரட்டைக்கருத்துக்கு இடமில்லை. ஏனெனில் மலையின் உச்சியை அடைவதற்கு அதன் உச்சியில் இருந்துதான் ஆரம்பிக்கவேண்டும்.

உச்சியிலிருந்து ஆரம்பிப்பதா? அது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி எழுவது இயல்பானதே. ஆனால் ஒரு முயற்சியின் வெற்றி அதன் ஆரம்பத்தில் தான் தங்கியுள்ளது. ஆரம்பம் தவறானால் முழுவதும் தவறானதாகிவிடும். இதனால்தான் ‘முதற்கோணல் முற்றும் கோணல்’ எனக்கூறுவது வழக்கமாக அமைந்துள்ளது. ஆரம்பம் கோணாமல் இருப்பதற்கு ஒரே வழி அதன் முடிவிலிருந்து ஆரம்பிப்பதுதான். உச்சி என்ற இலக்கை உள்ளத்தில் வைத்து வேறு எந்த நோக்கத்துக்கும் இடமளிக்காமல் முழுமையான தன்னம்பிக்கையுடன் ஆரம்பிப்பதுதான் வெற்றி நிச்சயம் என்பதை உறுதிப்படுத்துவதாகும். இன்னும் விரிவாகக் கூறுவதாயின் உச்சியை ஏற்கனவே நாம் அடைந்துவிட்டோம் என்ற உறுதிகுலையாத உள்ளத்துணர்வுடன் நாம் ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் மலை சிறிதாகவும் நாம் பெரிதாகவும் அமைவோம். எப்பொழுது மலை எம்மைவிடச் சிறிதாகின்றதோ அப்பொழுது உச்சியை அடைவதற்கான வழிகளும் இலகுவாக்கப்படுகின்றன. இதனால் நமது முயற்சியின்போது ஏற்படும் தடைகள் ஒருபொழுதும் எம்மைப் பின்னடைய வைப்பதில்லை. ஏனெனில் நாம் ஏற்கனவே உச்சியை அடைந்துவிட்டோம்.                                           

                                                                      3)  வாழ்க்கை

                                                                நிச்சயமான தோல்வி

ஒரு முயற்சியில் வெற்றியடைவதற்கு அதன் முடிவே ஆரம்பமாக இருப்பினும் அந்த முடிவு சாத்தியமானதா என்பதில் நாம் மிகவும் தெளிவுள்ளவர்களாக இருக்கவேண்டும். இந்தத் தெளிவை நாம் பெறுவதற்குப் பல வழிகள் இருக்கின்றன. இதற்கு மிகவும் இலகுவான வழி நாம் மேற்கொள்ளவிருக்கும் முயற்சியில் அல்லது அது போன்ற முயற்சியில் வேறு யாராவது வெற்றிகண்டுள்ளர்களா என்பதை அறியவேண்டும். ஏனெனில் தனிப்பட்ட முறையில் இதுவரையில் எவராலுமே கண்டுபிடிக்கப்படாத ஒரு புதிய கண்டுபிடிப்பைத் தவிர ஏனையவை எல்லாம் யாரோ ஒருவரால் நிச்சயமாக முயற்சி செய்யபப்ட்டிருக்கும்.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவுகள் பற்றிய தகவல்கள் மிகவும் முக்கியமான உதவியாகவிருக்கும். அதுமட்டுமன்றி ஒரு முயற்சியில் ஈடுபட்ட எவராலுமே வெற்றிகாண முடியவில்லை என்றால் அந்த விடயத்தை மீண்டும் முயற்சி செய்வது நமது உழைப்பையும் நேரத்தையும் வீணாக்கி விரக்தியை மட்டுமே விளைவாகத் தரும்.

மனிதர்களால் முயற்சி செய்யப்பட்டு வெற்றியடைய முடியாதது என்று ஏதாவது இருக்கின்றதா என ஆச்சரியப்ப்டதீர்கள். ஒன்றே ஒன்று இருக்கிறது. இதில் முயற்சி செய்தவர்கள் எவருமே வென்றதில்லை. இனிமேல் வெல்லப்போவதுமில்லை. இன்னொரு மனிதனது மனோபாவங்களையும் குணாதிசயங்களையும் மாற்ற முயற்சிப்பதில் எவருமே வெற்றியடைவதில்லை. அவரவர் தாங்களாகவே தங்களை மாற்றிக்கொண்டாலன்றி நாமாக மற்றவர்களை மாற்றமுடியாது. நாய் வாலை (இயல்பை) நிமிர்த்த முடியாது. ஏனெனில் அது இயற்கை. துரதிஸ்டவசமாக ஒரு நாயைப் பிடித்து அதன் வாலை நிமிர்த்த முயற்சித்து இறுதியில் முடியாமல் விரக்தியடைந்து அந்த நாயைக் கலைத்துவிட்டு சிறிது நேரத்தில் வேறொரு நாயைப் பிடித்து அதன் வாலை நிமிர்த்த முயற்சிக்கின்றோம். எத்தனை தடவைகள் முயன்றிருப்போம். இதுவரையில் வெற்றியடையமுடியவில்லை. இனிமேல் வெல்லப்போவது மில்லை. மற்றவர்களை நாம் ஒருபொழுதும் மாற்ற முடியாது. எனவே, நாய் வாலை நிமிர்த்துவதை நிறுத்திவிட்டு அந்த நேரத்தையும் உழைப்பையும் எமது சுயமுன்னேற்றத்துக்காக முதலீடு செய்வோம்.



                                     

                                                               2)   கல்வி

                                                       (ஒருமுகப்படுத்தல் )

                         ஒருமுகப்படுத்தல் (Concentration) என்பது நாம் ஈடுபடும் ஒரு செயலில் முற்றுமுழுதான கவனத்தைச் செலுத்துதல் என்பதாகும். இங்கே முற்றுமுழுதான கவனம் எனும்போது எந்த விதமான இடையறுப்புக்களுக்கோ அல்லது இடையூறுகளுக்கோ அல்லது இடைவெளிகளுக்கோ வாய்ப்பளிக்காத முறையில் கவனத்தைச் செலுத்துதலாகும். பொதுவாகப் பெற்றோகள் தமது குழந்தைகளிடமும், ஆசிரியர்கள் மாணவர்களிடமும் ஒருமுகப்படுத்தலை அதிக அளவு எதிர்பார்க்கின்றனர். ஆனால் ஒருமுகப்படுத்தல் என்பது வயது வேறுபாடின்றி அனைவருக்கும் ஒரு சவாலாக அமைந்திருக்கின்றது என்பது கசப்பான உண்மை. ஒருமுகப்படுத்தல் சவாலாக அமைவதற்கு இந்த ஒருமுகப்படுத்தலுக்கு தடையாக உள்ள காரணிகளை இனங்கண்டு கொள்வது அவசியமாகின்றது. இந்தக் காரணிகள் ஒருவரது மன நிலை, உடல் நிலை, செயல் இடம்பெறும் சூழல், செயலின் பெறுபேறு பற்றிய தெளிவு என்பனவாக அமைகின்றன.

ஒருவரது மனநிலை ஒருமுகப்படுத்தலுக்கு எவ்வாறு சவாலாக அமைகின்றது என்பதைப் பார்ப்போம். ஒருவரது சுபாவம் கூச்சத் தன்மையானதாக இருக்கும் போது, மனத்தில் ஓர் அச்ச உணர்வு தென்படும்போது, தன்னை ஒரு பலவீனமான பார்வைக்கு உட்படுத்தும் போது ஒருமுகப்படுத்தல் என்பது சாத்தியமற்றதாக அமைந்துவிடுகின்றது. ஒருவரது உடல் நிலையும் ஒருமுகப்படுத்தலில் கணிசமான அளவு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. உடற்சோர்வு, பசி, ஊட்டச் சத்துக் குறைவு, குறைவான உறக்கத்தால் ஏற்படும் களைப்பு, அளவுக்கு அதிகமான வேலைச் சுமையின் தாக்கம் என்பனவும் ஒருமுகபபடுத்தலுக்குச் சவாலாக அமைகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உடல் நிலையும், உள நிலையும் சாதகமாக இருப்பினும் ஒருமுகப்படுத்தலுக்கு உட்பட வேண்டிய செயல் இடம்பெறும் சூழல் பாதகமானதாக அமையும் போது அல்லது கவனத்தைத் திசை திருப்புவதாக அமையும் போது ஒருமுகப்படுத்தல் சாத்தியமற்றதாக அமைந்து விடுகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒருமுகப்படுத்தலுக்கான செயலின் பெறுபேறு என்ன என்பதில் தெளிவில்லாவிடில் உடல் நிலை, உள நிலை, சூழல் என்பன சாதகமாக இருப்பினும் பெறுபேறுகள் பற்றிய ஆர்வம் இன்மை காரணமாக ஒருமுகப்படுத்தல் சாத்தியமற்றதாக அமைந்து விடுகின்றது.

இப்போது, ஒருமுகப்படுத்தலுக்கு சவாலாக அமையும் காரணிகள் எவை என்பதை அறிந்து கொண்டோம். இயலுமான வரையில் இவ்வாறான இடையூறுகளில் இருந்து விடுபட்டு ஒரு காரியத்தில் ஈடுபடவேண்டும் என்பதை விளக்குவதற்காகவே இக் காரணிகள் முன்வைக்கப் பட்டுள்ளன. ஆனால் எமது ஒருமுகப்படுத்தும் திறனை வலுப்படுத்துவதற்கு மேற்குறிப்பிட்ட காரணிகள் அனைத்தையும் எமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள முடிமா என்றால் அதுவும் சாத்தியமற்றதாகவே உள்ளது. அப்படியானால் ஒருமுகப்படுத்தலை நிறைவேற்றுவது எப்படி?


ஒருமுகப்படுத்தல் என்பது ஒரு கலை. நாமாக உருவாக்க வேண்டிய ஒரு கலை. மிக மிக மோசமான உடல் நிலை, உள நிலை, சூழல் என்பன காரணிகளாக அமைந்தால் ஒழிய ஒருமுகப்படுத்தலை மிகவும் இலகுவான பயிற்சி மூலம் விரிவுபடுத்தலாம். ஏனெனில் ஒருமுகப்படுத்தல் என்பது சுற்றுப்புறத்தில் இருக்கும் அத்தனை பொருட்களில் இருந்தும் எமது கவனத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுதலாகும். இதற்கு எமக்கு இருக்கும் ஒரே ஒரு வழி ஒருமுகப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய ஒரு விடயத்தை, காரியத்தை அல்லது செயலை ஒரே நேரத்தில் பார்ப்பதும், கேட்பதும் எமது கண்களாக மட்டுமே இருத்தல் வேண்டும். பார்ப்பதும் கேட்பதும் எமது கண்களாக அமையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒருமுகப்படுத்தல் முழுமை பெறுகின்றது.
  

                                                           மனிதனின் கண்டுபிடிப்புக்கள் எல்லாம் இயற்கையில் உள்ளதை உருமாற்றம் செய்வது மட்டுமே. இயற்கையால் படைக்கப்பட்டவற்றை தனது தேவைக்கேற்ப மாற்றி அமைப்பது தான் மனிதனின் செயற்பாடு. இந்த மாற்றி அமைத்தலுக்குப் பெயர் 'கண்டுபிடிப்பு' என்கிறோம். இங்கே தான் மனிதனின் திறமையின் எல்லை எது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டி இருக்கின்றது. இயற்கையின் படைப்பில் மனிதப் படைப்பு மகத்துவமானது. மனிதப் படைப்புக்கு மிக நெருக்கமாக இருக்கக் கூடிய படைப்பு என்று ஒன்று இல்லை.

                                                                      1) குடும்பம்

                                                          ( தவறான கண்டுபிடிப்பு )

மிகவும் தனித்துவமான படைப்பாகிய மனிதப்படைப்பு தனக்கென்றே சில தன்மைகளைப் பெற்றுள்ளது வெளிப்படையானதுதான். இருப்பினும் இந்தத் தன்மைகள் வெளிப்படுத்தப்படாமல், அல்லது வெளிப்படுத்த விரும்பினாலும் வெளிப்படுத்த முடியாமல் இருப்பதற்கும் மனிதனே காரணமாகின்றான். இவற்றிற்கு அடிப்படையாக அமைவது அவனது தவறான கண்டுபிடிப்புக்களே. அதிசயிக்கத்தக்க பல கண்டுபிடிப்புக்களைத் தந்துதவிய மனிதன் ஒரு சில தவறான, அசிங்கமான அறிவியலுக்கு ஒவ்வாதவற்றையும் கண்டுபிடித்துவிட்டான்.

ஆனால் உணர்வும், மூளையும், விழிப்புணர்வும் கொண்ட ஒரேயொரு இனமான மனித இனம் இயற்கையில் இல்லாத ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறது. இயற்கையில் இல்லாத ஒன்றைக் கண்டு பிடித்ததாலோ என்னவோ அது தன்னைத் தானே கொல்லும் ஒன்றாக அமைந்துவிட்டது. அது மட்டுமல்ல ஒவ்வொருவரும் தாமாகவே அதைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். அதைப் பயன் படுத்துபவர் தன்னைத் தானே கொன்று கொண்டிருப்பதை அறியமுடியாத அளவுக்கு தனது கண்டுபிடிப்புக்குள் அகப்பட்டு அல்லற்படுபடுகின்றனர். அந்தக் கண்டுபிடிப்பு என்ன தெரியுமா? ஒப்பீடு செய்தல் (Comparison) .

உண்மையில் மனித அறிவீனத்தின் உச்ச நிலைக் கண்டுபிடிப்புத்தான் தான் ஒப்பீடு செய்தல். இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் தனித்துவமானது. ஒன்றைப்போல் இன்னொன்று படைக்கப்படுவதில்லை. கல்லாகட்டும், மண்ணாகட்டும், மரமாகட்டும், பூவாகட்டும், காயாகட்டும், விலங்குகளாகட்டும், அல்லது மனிதர்களாகட்டும். ஒவ்வொரு உயிரினமும், ஒவ்வொரு படைப்பும் தனித்துவமானது. அப்படியிருக்கும்போது எதற்காக மனிதன் தன்னை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்வதைக் கண்டுபிடித்தான். நமது வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமளித்தாலும் அவை எந்த விதத்திலும் எமது தனித்துவத்தைப் பாதிப்பதாக இருப்பதில்லையே. ஏனெனில் தனித்துவம் என்பது எல்லாவற்றையும் விட உயர்ந்ததல்லவா.

ஒரு மனிதனைப் போல் இன்னொரு மனிதன் இருந்ததும் இல்லை, இருக்கப் போவதுமில்லை என்பது எம்மால் அறியப்பட்ட ஒன்றாக இருந்தும் கூட ஏனிந்த ஒப்பீடு?. யாருடன் யாரை ஒப்பிடுகிறோம்? எப்படி இது புத்திசாலித்னமானதாக அமையும்? என்னை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்வது கோழைத்தனம் அல்லவா. அப்படியிருக்கும் போது கணவனையோ, மனைவியையோ, குழந்தைகளையோ மற்றவர்களுடன் ஒப்பீடு செய்யலாமா? உங்களையோ, உங்கள் கணவன் அல்லது மனைவியையோ, குழந்தைகளையோ அல்லது இன்னொரு மனித உயிரையோ உயர்வாக அல்லது தாழ்வாக ஒப்பீடு செய்து பொருத்தமாக்குவதற்கு இதுவரையில் எவரும் பிறந்ததில்லை. வாழ்ந்து கொண்டிருப் பவர்களில் எவருமில்லை. இனிமேல் பிறக்கப்போவதுமில்லை. ஒப்பீடு என்பது நாமாகக் கண்டுபிடித்துக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு கொடிய நோய். நாமாகக் கைவிட்டால் அது தானாகப் போய்விடும்.

                                                                 2) குடும்பம்

                                                                                         (   குடும்பம் ஒரு இருபக்க நாணயம் )


குடும்பம் ஒன்றின் உருவாக்கத்திற்கும் அதைத் தொடர்ந்துவரும் உறவுகளுக்கும் அடிப்படையாக அமைவது நட்பு. குடும்பம் ஒன்றின் ஆரம்ப அங்கத்தவர்களாக அமைகின்ற கணவன் என்ற ஆணும், மனைவி எனும் பெண்ணும் நட்பின் இணைப்பாக குடும்பம் எனும் அமைப்பை உருவாக்குகிறார்கள். இந்த அமைப்பையும் அதன் ஆரம்ப அங்கத்தவர்களாகிய கணவன் மனைவியையும் நாணயம் ஒன்றின் இயல்பு மூலமாகப் பார்ப்போம்.


நாணயமானது ஒரு நாட்டின் அடையாளச் சின்னமாக இருப்பது போல், குடும்பம் என்பது அது சார்ந்த சமூக அமைப்பின் அடையாளச் சின்னமாக அமைகின்றது. ஒரு நாணயத்தின் உட்பொருள் உலோகம். நாணயத்தின் உறுதித் தன்மையை வெளிப்படுத்துவது. குடும்பத்தின் உட்பொருள் நட்பு. கணவன் மனைவி இருவருக்கும் இடையிலான நட்பு. இந்த நட்பானது ஒரு குடும்பத்தின் உறுதித் தன்மையை வெளிப்படுத்துவது. உறுதியான நட்பை எந்தவிதமான இடர்களோ, அழுத்தங்களோ, எதிர்மறை விளைவுகளோ ஒன்றும் செய்து விட முடியாது. நட்பின் உறுதி குடும்பத்தின் உறுதியாகும்.

நாணயம் இரண்டு பக்கங்களைக் கொண்டது. இந்தப் பக்கங்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட, தமக்கெனத் தனித் தனியான தன்மைகளைக் கொண்ட, ஆனால் ஒன்றில் ஒன்று சார்ந்து இருக்கும் இயல்புகளைக் கொண்டவை. உதாரணமாக ஒரு நாணயத்தின் ஒரு பக்கம் பூவாகவும் மறு பக்கம் தலையாகவும் இருக்கும். இங்கே 'பூ' தனக்கான தனித்தன்மையையும் 'தலை' அதற்கான தனித் தன்மையையும் கொண்டிருக்கும். இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை. ஆனாலும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும். இதே போன்றே கணவனும் மனைவியும் குடும்பம் என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இருவரும் தனித்துவமானவர்கள். உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மாறுபட்ட தன்மைகளை உடையவர்கள். ஆனாலும் ஒருவரில் ஒருவர் சார்ந்து இருப்பார்.

மிகவும் முக்கியமான இன்னுமொரு இரகசியமும் இங்கே புதைந்து கிடக்கின்றது. அதாவது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியாது. இதன் பொருள் எந்தப் பக்கத்தைப் பார்க்கிறோமோ அந்தப் பக்கமாகிவிடு என்பது தான். அதாவது குடும்பம் என்ற நாணயத்தில் ஒருவர் மறு பக்கத்தைப் பார்க்கும் போது தனது பக்கம் முற்றாக மறைந்து விடுகின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தூய்மையான நட்பின் அடிப்படையே தன்னை மறைத்து, மறந்து, மற்றவரை முழுமையாகப் புரிந்துகொள்வது தான்.

நாணயத்தின் பெறுமதியை நிலைநாட்டுவதற்கு இந்த இரண்டு பக்கங்களின் பங்களிப்பைப் பற்றிப் பார்ப்போம். தனித்துவம், முரண்பாடு, வெவ்வேறு பக்கங்கள் எனப் பல்வேறு இயல்புகள் இந்த இரண்டு பக்கங்களில் இருந்தாலும் நாணயத்தின் பிரதிநிதித்துவம், அதன் பெறுமதி என்பவற்றை இரண்டு பக்கங்களுமே ஒன்று சேர்ந்து நகர்த்திக்கொண்டிருக்கின்றன. எப்பொழுது நாணயத்தின் ஒரு பக்கம் தனது தனித்தன்மையை இழக்கிறதோ அல்லது மறு பக்கத்தை இழக்க அனுமதிக்கிறதோ அப்போது அதன் பெறுமதி இழக்கப்பட்டு 'செல்லாக் காசாக' புறக்கணிக்கப்படுகிறது. இவ்வாறே குடும்பம் என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்களான கணவனும் மனைவியும் அந்தக் குடும்பத்தின் பெறுமதியை நிலையாக உறுதிப்படுத்துவதற்கு தமது தனித்தன்மையையும் இழக்காமல் அதே நேரத்தில் மற்றவரது தனித் தன்மைக்கும் இழப்பு ஏற்படுத்தாமல் வாழ்க்கையை நகர்த்த வேண்டும். ஏனெனில் ஒரு நாணயத்தின் எந்தப் பக்ககம் பெறுமதி இழந்தாலும் அது அந்த நாணயத்தின் ஒட்டு மொத்தமான பெறுமதி இழப்பாகி விடுவது போல் குடும்பம் ஒன்றில் கணவன் மனைவி இருவரில் எவர் தனது பெறுமதியை இழந்தாலும் அல்லது ஒருவர் மற்றவரது பெறுமதியை இழக்கச் செய்தாலும் அது குடும்பத்தின் ஒட்டுமொத்தமான பெறுமதி

இழப்பாகவே அமைந்துவிடுகின்றது. 


                                                             பெற்றோருக்கு

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை' என்ற வாக்கியம் பழமையானதும் பழகிப் போனதுமான ஒன்றாகிவிட்டது. உண்மையில் இந்த வாக்கியத்தை முதல் முதல் இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் யார் என்பது எமக்குத் தெரியாவிட்டாலும் இன்று வரை இது சுமந்து செல்லப்படுகின்றது என்பது மட்டும் உண்மை. நாம் தொட்டிலில் எமது வாழ்க்கையைத் தொடங்கிய போது எந்தப் பழககத்துடனும் வரவில்லையே! யார் எமக்குப் பழக்கினார்கள்? எதைப் பழக்கினார்கள்? எப்படிப் பழக்கினார்கள்?

பழக்கியவர்கள் தாம் மறைந்த பின்னரும் அதை சுடுகாடு வரைக்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்று கட்டளை இட்டார்களா? இல்லையே! அப்படியாயின் தொட்டிலில் பழகியது சுடுகாடுவரைக்கும் கொண்டு செல்லப்படுவது எப்படி? யாரால் கொண்டு செல்லப்படுகிறது? இவ்வாறான வினாக்களுக்கு விளக்கம் அளிப்பது மட்டுமல்ல எனது நோக்கம். நேர்மையும் நெஞ்சுத் துணிவும் கொண்டு எதிர்காலத்தைத் தமக்குச் சொந்தமாக்கும் பக்குவத்தை உடைய குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் அவர்களை தொட்டிலில் இருந்து எங்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதயும் விளக்குவது தான் நோக்கம்.

முதலில், ஒரு குழந்தையின் ஆரம்பப் பழக்க வழக்கங்களின் போதகர்களாக, ஆசிரியர்களாக, வழிகாட்டிகளாக பெற்றோர்கள் அமைந்து விடுகிறார்கள். தாயின் மடியில் ஆரம்பிக்கும் ஒரு குழந்தையின் வாழ்க்கை அதே அணைப்பின் உணர்வைக் கொடுக்கும் தொட்டிலுக்கு அறிமுகப் படுத்தப்படுகிறது. தாயின் மடியும் தொட்டிலுமாக மாறி மாறி அதன் வாழ்க்கை நகர்த்தப்படுகின்றது. இவ்வாறு நகர்த்தப்படும் காலப் பகுதியில் பல விடயங்களைக் குழந்தை கற்றுக்கொள்கிறது. கற்றலின் பெரும் பகுதி அதன் அவதானிப்பால் உள்வாங்கப்படுகின்றது. தன்னைச் சுற்றியுள்ள சக்தியின் அதிர்வலைகள் மூலம் அதன் தன்மையை உணர்கிறது. உள்வாங்குகிறது. உதாரணமாக, தாயின் குரலை அந்தக் குரல் உருவாக்கும் அதிர்வலைகள் மூலம் குழந்தை பதிவு செய்து விடுகிறது. பதிவு செய்யப்பட்ட பின்னர் மீண்டும் மீண்டும் அந்தக் குரலை கேட்கும் போது அந்தக் குரலை இனம் கண்டுகொள்கின்றது. இவ்வாறாக ஒவ்வொரு ஓசையும் முதலில் அதற்கு அதிர்ச்சி தருவதாக அமைந்தாலும் அந்த ஓசைகள் மீண்டும் மீண்டும் ஒலிக்கப்படும் போது குழந்தைக்கு அது பழக்கப்பட்ட ஒன்றாகி விடுகின்றது. இந்தக் கற்றலானது ஒலி சார்ந்த கற்றலாக அமைகின்றது. ஒலி அதிர்வு சார்ந்த கற்றலே குழந்தையின் ஆரம்பக்கற்றலின் ஒரு பகுதியாகும்.. குழந்தையின் அடுத்த கற்றல் நிலை ஒளி சார்ந்ததாக அமைகின்றது. இப்போது குழந்தையின் பார்வைக்கு உட்படுபவை எல்லாம் அதன் ஆழ்மனதில் படங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. அத்துடன் ஒலியையும் ஒளியையும் இணைத்துக் கொள்ளும் தகுதியும் குழந்தைக்கு ஏற்படுகின்றது. இப்போது அது பதிவு செய்துள்ள குரலையும் அதற்கு உரியவரது உருவத்தையும் இனங்கண்டுகொள்கின்றது. இங்கே ஒரு குழந்தையின் கற்றல் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுவதற்கான காரணம் இக்கட்டுரையை உள்வாங்கிக் கொள்ளும் பெற்றோர்கள் ஒரு குழந்தை குறிப்பிட்ட வயதின் பின்னரே தனது கற்றலை ஆரம்பிக்கின்றது என்ற தவறான அபிப்பிராயத்தை அடியோடு அழித்துவிட்டு, குழந்தை அதன் முதலாவது மூச்சிலிருந்தே கற்க ஆரம்பிக்கின்றது என்ற உண்மையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.

அடுத்ததாக, குழந்தையின் பழக்க வழக்கங்கள் பற்றிப் பார்ப்போம். ஒரு குழந்தையின் பழக்கங்கள் என்பன அந்தக் குழந்தைக்கு நாம் கொடுக்கும் பயிற்சிகள் தான். எமது ஒரு செயல் குழந்தைக்கு அது சார்ந்த ஒரு செயலுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். இந்த ஊக்கத்தின் வெளிப்பாடு குழந்தையின் குரல் (ஒலி) சார்ந்ததாகவும் அது உள்வாங்கிக் கொண்ட தன்மையைப் பொறுத்து தனது முகத்தின் பிரதிபலிப்பு (ஒளி) சார்ந்ததாகவும் அமையும். இங்கே நாம் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் செயற்படுத்தும் போது அந்தச் செயற்பாட்டுக்கு தொடர்ச்சியாக தனது பிரதிபலிப்பை வெளிப்படுத்தும் குழந்தை அதற்குப் பழக்கப்பட்டுவிடும். இது அக் குழந்தையின் பழக்கமாகி விடும். காலப் போக்கில் ஒரு குழந்தை தனக்குப் பழக்கமாக்கிக் கொண்ட ஒரு விடயத்தை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் முழுமையாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கும். ஏனெனில் இப்போது குழந்தைக்கு அது வழக்கமாகிவிட்டது. எனவே ஒரு குழந்தை எதையெல்லாம் பழக்கமாக்கிக் கொள்ளல் வேண்டும் என்பதில் பெற்றோர்கள் அதன் தொட்டில் காலத்தில் இருந்தே கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் அந்தப் பழக்க வழக்கங்கள் எதிகாலத்தை நிர்வகிப்பதில் எவ்வாறான பங்களிப்பைச் செய்யவேண்டும் என்பதிலும் அவதானமாக இருத்தல் வேண்டும்.

பெரும்பாலான பெற்றோர்கள் தமது குழந்தைகளிடம் நெஞ்சுத் துணிவும் நேர்மையும் கொண்டு எதிர்காலத்தைத் தமக்குச் சொந்தமாக்கும் தகுதியை உருவாக்குவதில்லை. மாறாக ஏற்கனவே தாம் தொட்டிலில் நீண்ட காலம் இருந்து தமக்குப் பழக்கமாகிப் பின் வழக்கமாகி, எதிர் நீச்சல் போடுவதற்கான வலிமையை இழக்கவைத்து, தாம் அடிமைகளாக்கப்படுவதற்குக் காரணமான இரவல் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், மரபுகளையும், போலியான குடும்ப அந்தஷ்துக்களையும் தமது குழந்தைகளுக்கும் தொட்டிலிலே கற்றுக் கொடுத்து அறுபது எழுபது வருடங்களுக்குச் சுமக்கவிட்டு அப்படியே சுடுகாட்டுக்கு வழிகாட்டி விடுகிறார்கள். தாம் உயிர் வாழும் காலம் வரை தமது குழந்தைகள் தொட்டிலை விட்டு இறங்குவதற்கு இந்தப் பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. அதனால் தொட்டிலிலே பழக்கப்பட்டது சுகமாகிப் போனதால் இந்தக் குழந்தைகளும் தொட்டிலைவிட்டு இறங்குவதற்கு முயற்சிப்பதுமில்லை. ஏனெனில், தொட்டிலை விட்டு இறங்கினால் எங்கே போவது, என்ன செய்வது என்ற அச்சம் இவர்களுக்கு. ஆனாலும், ஆனாலும்.... ஆனாலும், முற்றுமுழுதான உள்ளுணர்வோடு இரு கரங்களையும் கூப்பி நன்றி கூறுவதற்குத் தகுதி பெற்றுள்ள பெற்றோர்களும் இல்லாமல் இல்லை. இவர்கள் தான் நெஞ்சுத் துணிவும் நேர்மையும் கொண்டு எதிர்காலத்தைச் சொந்தமாக்கித் தாமும் மற்றவர்களும் நற்பயன்களை அடைவதற்குத் தகுதி வாய்ந்த குழந்தைகளை இந்த உலகிற்குத் தருகிறார்கள். இவர்கள் செய்வதெல்லாம் தமது குழந்தைகளைத் தொட்டிலில் இருந்து தொட்டிக்கு நகர்த்தி, அந்தத் தொட்டிக்குள் படிப்படியாக நீர் மட்டத்தை உயர்த்தி நீச்சலைக் கற்றுக் கொடுப்பதுதான். நீந்தப் பழகிவிட்ட குழந்தை குளத்திலும் நீந்தும் கடலிலும் நீந்தும். எதிர் நீச்சலும் போடும். நேர்மையும் நெஞ்சுத் துணிவும் இயல்பாகவே அமைந்துவிடும். நிகழ் காலத்தில் வாழப் பழகிவிடும். அதனால் எதிர் காலத்தைச் சொந்தமாக்கிவிடும். தொட்டிலில் இருந்து தொட்டிக்கு நகர்த்தப்படும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்தத் தகுதியும் திறமையும் உருவாகும். இன்றும் நாளையும் இவர்களுக்குத்தான் சொந்தம்.


                                                                                                       குடும்பம் ஒரு  தளம் களம் அல்ல

குடும்பம் என்பது புரிந்துணர்வுக்கான தளம். போராட்டத்துக்கான களம் அல்ல. குடும்பத்தின் ஆரம்ப அங்கத்தவர்களான கணவன் மனைவி எனும் இரண்டு ஜீவன்களுக்கிடையே எண்ணில் அடங்காத வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த வேறுபாடுகள் உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அமைந்துள்ளன. இதனால் தான் தரமான குடும்ப வாழ்க்கை என்பது இந்த வேறுபாடுகளைக் கவனத்தில் கொள்ளாத வாழ்க்கைதான்.

எப்போது நாம் ஒருவரை எம்மிலிருந்து வேறுபட்டவர் என எண்ணுகிறோமோ அப்போது அவரிலிருந்து எம்மை நாம் விலக்கிக் கொள்கிறோம் என்பது தான் உண்மை. ஏனெனில் இந்த வேறுபாடும் விலக்கலும் தான் பகைமை உணர்வை ஏற்படுத்துகின்றது. இந்தப் பகைமை உணர்வு நாளடைவில் போராட்டத்துக்கு வழி அமைத்து விடுகின்றது. ஒரு போராடத்தின் ஆரம்ப கர்த்தா எப்போதுமே ஒரு தனி மனிதன் தான்.

ஒரு மனிதனுக்குள் ஏற்படும் பகைமை உணர்வின் விளைவு தான் போராட்டத்திற்கு விதையாகின்றது. இந்த விதை மரமாவதோ அல்லது இன்னொரு விதைக்கு உரமாவதோ தவிர்க்க முடியாததாகும். விதை மரமாகுமானால் போராட்ட வடிவத்தை அடைந்ததுவிடுகிறது. உரமானால் இன்னொரு போராட்ட விதை மரமாவதற்கு உறுதுணையாக அமைந்துவிடுகின்றது.

இதனால் தான் பகைமை உணர்வு என்ற விதை என்ன வடிவத்தை எடுத்தாலும் ஆபத்தானதே. குடும்பத்தின் தளம் நட்பு. நட்பின் தளம் புரிந்துணர்வு. புரிந்துணர்வின் தளம் நிபந்தனையற்ற ஏற்றுக்கொள்ளல். நிபந்தனையற்ற ஏற்றுக்கொள்ளல் என்பது உள்ளதை உள்ளபடி உள்வாங்குதல். இந்தச் சிறப்பம்சங்களை பயில்வதற்குத் தரப்பட்டுள்ள அதி சிறந்த தளம் தான் குடும்பம்.




                                


This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola